செய்திகள்
தூத்துக்குடி ராம்நகரில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

தூத்துக்குடி மாநகரில் 300 இடங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

Published On 2021-11-29 05:09 GMT   |   Update On 2021-11-29 07:28 GMT
திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 25-ந்தேதி பெய்த கனமழையால் மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

மாவட்டத்திலும் தாழ்வான கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. தரைப்பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. மாநகரில் ரஹ்மத் நகர், ராம்நகர், முத்தம்மாள் காலனி, தனசேகரன்நகர், அய்யாச்சாமி காலனி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

ஒருசில இடங்களில் பண்ணை பசுமை அங்காடிகளில் இருந்து காய்கறிகள் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களில் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்தது.

திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது. கழுகுமலை, எட்டயபுரத்தில் அதிகபட்சமாக 32 மில்லிமீட்டர் மழை பெய்தது. குலசேகரன்பட்டினத்தில் 29 மில்லிமீட்டரும், திருச்செந்தூரில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.



இதற்கிடையே நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மழை பாதிப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் ராம்நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அவரது மேற்பார்வையில் மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கிய சுமார் 300 இடங்கள் கண்டறியப்பட்டு, 313 மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தேங்கி கிடக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு, நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக கூறி ஒருசில இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக நீரை வெளியேற்றக்கோரியும், மருத்துவ முகாம்கள் நடத்தி, காய்ச்சல் மாத்திரைகள் வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இன்று காலை பெரும்பாலான இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. பல சரக்கு பொருட்கள், பால், காய்கறிகள் தொகுப்பும் வழங்கப்பட்டது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags:    

Similar News