செய்திகள்
ராமதாஸ்

மிதிவண்டி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2021-11-18 06:50 GMT   |   Update On 2021-11-18 06:50 GMT
மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக ஊழியர்கள் நேற்று மிதிவண்டியில் அல்லது பொதுப்போக்குவரத்து மூலம் அலுவலகம் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மதித்து வாரியத்தின் தலைவர் உதயன் நேற்று தமது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு மிதிவண்டியில் பயணம் செய்திருக்கிறார்.

பெரும்பான்மையான ஊழியர்கள் மிதிவண்டிகள் மூலமாகவும், வெகுதொலைவிலிருந்து வரும் பணியாளர்கள் பொதுப்போக்குவரத்து மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். இந்த சிறிய முயற்சி மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் காற்று  மாசு 20 சதவீதம் குறைந்திருக்கிறது.

மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோரில் 50 விழுக்காட்டினர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

அதுமட்டுமின்றி, இப்போது மகிழுந்துகள், இரு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோர் 8 கி.மீ.க்கும் குறைவான தூரத்துக்கு பயணிக்க, ஆண்டுக்கு 240 நாட்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதால் 10 ஆண்டுகளில் கிடைக்கும் மருத்துவப் பயன்களின் மதிப்பு மட்டும் ரூ.4.76 லட்சம் கோடி (ஆண்டுக்கு ரூ.47,670 கோடி), காற்று மாசு தடுக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள் ரூ.24,100 கோடி ஆகும்.

மிதிவண்டிகள் ஏழைகளுக்கும் நன்மை தருகின்றன. ஏழை மக்கள் 3.5 கி.மீ தொலைவு வரை நடப்பதற்கு பதிலாக மிதிவண்டியில் பயணிப்பதால் மிச்சமாகும் உழைப்பு நேரத்தின் மதிப்பு ரூ.11,200 கோடி என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த புள்ளிவிவரங்களின் படி பார்த்தால் மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும்.

இவை அனைத்துக்கும் மேலாக நமது சந்ததிகள் இந்த பூமியில் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிதிவண்டி அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News