செய்திகள்
காட்டு யானை

பழனி அருகே காட்டு யானை மிதித்து மூதாட்டி பலி

Published On 2021-10-02 14:37 GMT   |   Update On 2021-10-02 14:38 GMT
காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம் பழனி பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பழனி:

பழனி அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டியவாறு ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு வரும் யானைகள் பயிர்களையும், குடியிருப்பு பகுதியையும் சேதப்படுத்தி சென்றுவிடும்.

இந்தநிலையில் பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்துசெட்டு பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி பாக்கியம் (வயது 60). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அவர் தனது மகனின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

பாக்கியம் நேற்று முன்தினம் அங்குள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பாக்கியத்தை அவரது மகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

இதற்கிடையே நேற்று காலை அங்குள்ள மரத்தின்கீழ் உடல் நசுங்கிய நிலையில் பாக்கியம் இறந்து கிடந்தார். மேலும் அவர் இறந்து கிடந்த பகுதியில் யானையின் கால்தடம் இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், விறகு சேகரிக்க சென்ற பாக்கியத்தை காட்டு யானை மிதித்து கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News