செய்திகள்
விபத்து

திருச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு

Published On 2021-09-23 04:52 GMT   |   Update On 2021-09-23 04:52 GMT
விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகள் அதிக இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி:

திருச்சி புறநகர் மாவட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்துகள் நடக்கின்றன. மாவட்டம் முழுவதும் அதிகம் விபத்து நடக்கும் பகுதியாக 39 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் 20 இடங்கள் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. திருச்சி மாவட்ட குற்ற ஆவண காப்பக தகவல்களின்படி திருச்சி மாவட்டத்தில் 2020-ல் 570 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு ஆண்டில் 8 மாதங்களில் 1,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் அதிகமாகி உள்ளது.

விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகள் அதிக இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 38) 9 இடங்கள் அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாலையில் மட்டும் நடப்பு ஆண்டில் 270 விபத்துகள் நடந்துள்ளன.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க தற்போது 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் போலீசார் விபத்து நடக்கும் பகுதியை அதிகம் கண்காணித்து வருகின்றனர். தேவையான இடங்களில் வாகன போக்குவரத்தை சீர் செய்கின்றனர்.

மேலும் விபத்துகள் அதிகரித்துள்ளதால் 4 அதிகாரிகள், ஒரு டிரைவர் உள்ளடக்கிய இன்னொரு ரோந்து வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு வெகுகாலம் நீடித்தது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. ஆனால் 2021-ல் வாகன போக்குவரத்து தாராளமாகி உள்ளன. ஆகவே விபத்துகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம். ஆனால் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டிச்செல்வதாலும் விபத்துகள் அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை என்.எச்.38-ல் நடந்த விபத்துகளின் விபரம் வருமாறு:-

கொள்ளிடம் காவல் நிலைய எல்லையில் 44 விபத்துகளும், இருங்கனூர் காவல்நிலைய எல்லையில் 42 விபத்துகளும், கோதூர் எல்லையில் 35 விபத்துகளும், பழூர் எல்லையில் 33 விபத்துகளும், பானமங்கலத்தில் 25 விபத்துகளும், நாகமங்கலம் காவல்நிலைய எல்லையில் 25 விபத்துகளும், கோணலை காவல் நிலைய எல்லையில் 24 விபத்துகளும், செவ்வந்தி பட்டியில் 24 விபத்துகளும், ஆலம்பட்டி காவல்நிலைய எல்லையில் 21 விபத்துகளும் நடந்துள்ளன. இதேபோன்று மாவட்டத்தின் இதர மாநில, தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிகம் இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன.
Tags:    

Similar News