செய்திகள்
விமான சேவை

மதுரையில் அடுத்த மாதம் முதல் கூடுதல் விமான சேவைகள் தொடக்கம்

Published On 2021-06-19 07:00 GMT   |   Update On 2021-06-19 07:00 GMT
மதுரைக்கு அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு 8 விமான சேவைகள் கூடுதலாக இருக்கும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவனியாபுரம்:

கொரோனா 2-ம் அலை பரவியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் விமான சேவையை நிறுத்தியது.

மதுரைக்கு வரும் விமான சேவையும் நிறுத்தப்பட்டு பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறையவே விமான சேவையை மதுரையில் தொடங்கியது.

தினமும் காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு விமான சேவையும், காலை 10 மணிக்கு துபாயில் இருந்து மதுரைக்கு விமான சேவையும் இயக்கப்படுகிறது.

அதேபோல் சென்னை-மதுரைக்கு 11 மணிக்கு ஒரு விமானமும், பெங்களூரில் இருந்து 12.30 மணிக்கு ஒரு விமானமும், சென்னையில் இருந்து 12.30-க்கு ஒரு விமானமும், மாலை 5.50-க்கு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானமும் இயக்கப்படுகிறது.

மாலை 6.10 மணிக்கு மும்பையில் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும், இரவு 9.30-க்கு சென்னையில் இருந்தும், அதே நேரத்தில் மும்பையில் இருந்து மதுரைக்கு 2 விமானங்களும் வருகின்றன. மொத்தம் தினமும் மதுரைக்கு 9 விமான சேவைகள் உள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்ததால் அதிக பயணிகள் வர தொடங்கியதால் இண்டிகோ நிறுவனம் வரும் 25, 27 ஆகிய தேதிகளில் மும்பை-மதுரை, மதுரை-மும்பை இடையே விமான சேவையை தொடங்குகிறது.

அடுத்த மாதம் (ஜூலை) முதல் இண்டிகோ நிறுவனம் வாரத்திற்கு 4 முறையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வாரத்திற்கு 4 முறையும் விமானம் சேவையை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதன்படி மதுரைக்கு அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு 8 விமான சேவைகள் கூடுதலாக இருக்கும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News