செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்டத்தில் தொடரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

Published On 2021-06-06 09:10 GMT   |   Update On 2021-06-06 09:10 GMT
மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி உள்பட 84 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 339 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் முதல் டோஸ் 1 லட்சத்து 28 ஆயிரத்து 146 பேருக்கும், 2-வது டோஸ் 29 ஆயிரத்து 193 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாநகரின் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு காரணமாக ஊசி போடப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரும்பாலான மையங்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை போக்குவதற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் நெல்லைக்கு வந்துள்ளது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரித்து அனுப்புவார்கள்.

அவர்கள் எவ்வளவு தடுப்பூசி வந்துள்ளது, மாவட்ட அளவில் எந்தெந்த மையங்களுக்கு அனுப்ப வேண்டும், எந்த மையங்களுக்கு முதலில் அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். ஆனால் தடுப்பூசி வருகை குறித்து நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை.

தடுப்பூசி ஒன்றே கொரோனாவை விரட்டுவதற்கான ஆயுதம் என்று அரசு கூறிவருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட மையங்களுக்கு சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொள்ளாமல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட கலெக்டர் இதனை கவனத்திற்கு எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News