செய்திகள்
தமிழக அரசு

மனுக்கள் மீதான நடவடிக்கையை கண்காணிக்க தொடர்பு அலுவலர் நியமனம்- அரசாணை வெளியீடு

Published On 2021-05-14 01:50 GMT   |   Update On 2021-05-14 01:50 GMT
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு வரும் மனுக்கள் மீதான நடவடிக்கையை கண்காணிப்பதற்காக தொடர்பு அலுவலரை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற புதிய அரசுத் துறை தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைக்கு சிறப்பு அலுவலரை அரசு நியமனம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக பணியாளர்கள் மற்றும் சில கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர ஆணை பிறப்பிக்கும்படி சிறப்பு அலுவலர் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

அதன்படி, முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் இயங்கிவரும் பிரிவுகளில் ஒரு பிரிவை, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற துறையுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்படுகிறது.

தனிச் செயலாளர்கள், நேர்முக உதவியாளர், பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணியிடங்கள், பொது நிர்வாக துறை மூலம் நிரப்பப்படும்.

முதல்-அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை இந்தத் துறை மூலம் பரிசீலிக்க ஏதுவாக, மின் ஆளுமை முகமையில் இயங்கி வரும் முதல்-அமைச்சர் உதவி மையக் குழுவை பயன்படுத்திக் கொண்டு, அனைத்து மனுக்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

அதன் பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, தீர்வு ஆகியவற்றை முதல்-அமைச்சரின் தனிப் பிரிவு கண்காணிக்க வேண்டும்.

அனைத்து அரசுத் துறை தலைமை அலுவலகங்களிலும், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மூலம் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, தீர்வு ஆகியவற்றை கண்காணிக்க தொடர்பு அலுவலர் ஒருவரை கூடுதல் பொறுப்பில் நியமிக்க ஆணையிடப்படுகிறது.

அனைத்து மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கும் அலுவலரைக் கொண்டு தனிப்பிரிவை ஏற்படுத்தி மனுக்கள் மீதான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News