செய்திகள்
ரஜினிகாந்த்

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை- ஒருநபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில்

Published On 2021-04-23 02:27 GMT   |   Update On 2021-04-23 02:27 GMT
‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை’’ என்று ஒருநபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளதாக ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 27-ம் கட்ட விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் வக்கீல் அருள் வடிவேல் சேகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, இதுவரையில் 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 712 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த 27-ம் கட்ட விசாரணையில் மட்டும் 48 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் (மே) 17-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும்.

விரைவாக விசாரித்து விசாரணை அறிக்கையை அரசிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம்.

வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் சி.பி.ஐ. 3 கட்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 27 பேர் மீதும், 2-வது கட்டமாக 44 பேர் மீதும், 3-வது கட்டமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை என்பவர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மற்றபடி பொதுமக்கள் மீது மட்டுமே சட்டவிரோதமாக கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இனி காயமடைந்த போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பது தற்செயலாக நடந்தது. திட்டமிட்டு நடந்தது அல்ல. சம்பவத்தன்று ஊர்வலத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என்று கூறியதற்கான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.

இருப்பினும் அவரது வயது கருதி, கொரோனா தொற்று காரணமாக, பின்னால் மீண்டும் சில சந்தேகங்களுக்காக விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். வக்கீல் மூலமாக அவர் எழுதி கையெழுத்திட்டே குறிப்பிட்டுள்ளார். சுமார் 15 கேள்விகள் அவரிடம் கேட்டிருந்தோம். எல்லாவற்றிற்கும் பதில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News