search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு"

    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
    • இந்த அறிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

    நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசால் நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

    காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் நிவாரணத் தொகையாக ரூ. 93 லட்சம் வழங்கப்பட்டது. மேற்காணும் நிகழ்வு தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

    இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பரத்ராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால், அவரின் தாயாருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்ட 38 வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் "தடையில்லாச் சான்றிதழ்" வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ்குமார் யாதவ், இ.கா.ப., கபில்குமார் சி. சரத்கர், இ.கா.ப. ஆகிய இந்திய காவல்பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுதவிர, ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ், ஒரு உதவி ஆய்வாளர், 2 இரண்டாம் நிலைக் காவலர், ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 முதல் நிலைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி போராட்டத்தில் தொடர்புடையவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது ஆணையம். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணையத்தில் வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறும், வரும் போது உடன் ஒருவரை அழைத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது, ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக என பல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து வழக்குகளையும் சென்னைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

    மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜூலை 2-ம் தேதி பிற்பகலில் பட்டியலிட வேண்டும் என ஐகோர்ட் பதிவாளருக்கும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆலை விரிவாக்கத்துக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக போலீசாரின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

    துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசாரின் எப்.ஐ.ஆரில், துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் சேகர் ஆகியோரின் உத்தரவின் பெயரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எப்.ஐ.ஆரிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் மாற்றி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் சடலங்கள் ஏற்கனவே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடலை ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 7 பேரின் உடலை மறுபரிசோதனை செய்தபோது பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி எவ்வளவு சீக்கிரம் உடற்கூறு பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். #ThoothukudiShooting
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலோ அல்லது துப்பாக்கிச்சூடு குறித்து எந்த கருத்தும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்த முழு அறிக்கை வெளியாகாததாலே பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று அவர் சென்னையில் பேசும் போது அரசியலில் இருந்து நடிகர்கள் விலகியே இருக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தகவல்களோ, காவல்துறை அத்துமீறல் குறித்த தகவல்களோ இருந்தால் ஜூன் 22-ம் தேதிக்குள் தரலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22-ந்தேதி நடை பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இழப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் சட்டம்-ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க உள்ளது.

    காவல் துறை தரப்பில் அத்துமீறல் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

    இதுபற்றி நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உள்ளவர்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமாண உறுதி மொழி பத்திர வடிவில் விசாரணை ஆணையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் விசாரணை ஆணையம் செயல்பட உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தூத்துக்குடி செல்கிறேன்.

    மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து விட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட உள்ளேன்.

    மறுநாள் (5-ந்தேதி) துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட முடிவு செய்துள்ளேன்.

    விசாரணை ஆணையம் சென்னையிலும், தூத்துக்குடியிலும் செயல்படும். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் உள்ளே நுழைந்ததாக ரஜினிகாந்த் ஆவேசத்துடன் கூறியுள்ளார். #Rajinikanth #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. போலீசாரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

    காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்.

    என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார். 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித விசாரணை ஆணையத்தின் 4 அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த தூத்துக்குடி வர உள்ளனர். #ThoothukudiShooting #NHRC
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடி வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடம், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×