செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டதை காணலாம்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கடற்கரை

Published On 2021-04-06 08:11 GMT   |   Update On 2021-04-06 08:11 GMT
கன்னியாகுமரியில் இருந்த வெளி மாவட்டத்தினரும் வெளியேறினர். அத்துடன் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வரவில்லை.
கன்னியாகுமரி:

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் காலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிப்பார்கள்.

மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு மூலம் சென்று பார்த்து, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி மகிழ்வார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. நூறு சதவீதம் வாக்கு பதிவுக்கு வழிவகுக்கும் வகையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் யாரும் இங்கு இருக்கக்கூடாது. அவரவர் தங்களது தொகுதிகள் தான் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தில் தங்கியிருந்த வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டனர். அதே போல் கன்னியாகுமரியில் இருந்த வெளி மாவட்டத்தினரும் வெளியேறினர். அத்துடன் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வரவில்லை.

இதனால் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக காலையில் சூரிய உதயத்தை காணவும், கடலில் புனித நீராடும் பகுதியிலும் ஏராளமானோர் கூடுவார்கள். ஆனால் நேற்று முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இன்றும் அதே நிலை தான் காணப்பட்டது.



Tags:    

Similar News