செய்திகள்
கைது

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் செல்ல இருந்த வங்கதேச வாலிபர் கைது

Published On 2021-02-21 07:43 GMT   |   Update On 2021-02-21 07:43 GMT
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் செல்ல இருந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரானது.

அதில் பயணம் செய்யவந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் முகவரியுடன் கூடிய பாஸ்போர்டில் சோலைமான்(29) என்ற பெயரில் ஒருவர் இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவரின் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரை துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவருடைய உண்மையான பெயர் மியாக். அவர் வங்க தேசத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தனி அறையில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.மேலும் கியூ பிரிவு போலீசார்,உளவு துறை அதிகாரிகளும் நீண்ட நேரமாக விசாரணை நடத்தினர்.அவர் வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் எப்படி வந்தார்?

தமிழ் நாட்டில் திருப்பூரில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தார்? இவருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த ஏஜெண்ட் யார்? இவர் பயங்கரவாத கும்பலோடு தொடர் புடையவரா? என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர். ஆனால் வங்கதேச வாலிபர் எந்த கேள்விக்கும் சரியான பதிலை கூறவில்லை.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வங்கதேச வாலிபரை கைது செய்தனர். அதோடு மேல்நடவடிக்கைக்காக அவரை இன்று காலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News