செய்திகள்
பறவைகள் கணக்கெடுப்பு நடந்தபோது எடுத்த படம்.

குமரி மாவட்டத்திற்கு பறவைகள் வரத்து குறைந்துள்ளது

Published On 2021-02-17 07:46 GMT   |   Update On 2021-02-17 07:46 GMT
குமரி மாவட்டத்தில் இன்று காலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

இன்று காலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் பங்கேற்றார் 7 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர் மற்றும் பறவை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றிருந்தனர்.

சுசீந்திரம் குளம், தேரூர் குளம், மாணிக்க புத்தேரி குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. நவீன கேமராக்களுடன் வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். வழக்கமாக காணப்படும் பறவைகளைவிட இந்த ஆண்டு குறைவான அளவு பறவைகளே தென்பட்டது.

மணக்குடி, புத்தளம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. கூலக்கடா, வர்ண நாரை, கொசு உல்லான், வெண் கொக்கு, நெடுங்கால் உல்லான், செம்மிசை ஆல்காட்டி, கரண்டிவாய் நாரை, வெள்ளை ஐபிஎஸ், குருட்டு கொக்கு, வெளிநாட்டு பறவைகள் செங்கால் உல்லான், சதுப்பு நில மணல் உல்லான், பச்சை மணல் உல்லான், சாத மணல் உல்லான் உள்ளிட்ட வகையான பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், பறவை ஆர்வலர்கள் ராபர்ட் கிராப், டேவிட்சன் ஆகியோரும் கணக்கெடுக்கும் பணியில் கலந்து கொண்டனர். நாளையும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

இதுகுறித்து பறவை ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு குறைவான அளவு பறவைகளே வந்துள்ளது. வழக்கமாக 50-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் தென்படும். ஆனால் தற்போது 30 வகையான பறவைகள் மட்டுமே இருந்தது. வெளிநாட்டு பறவைகளும் குறைவான அளவே வந்துள்ளது என்றார்.



Tags:    

Similar News