செய்திகள்
விக்கிரமராஜா

உள்ளாட்சி வரிகளை ரத்து செய்ய வேண்டும்- விக்கிரமராஜா

Published On 2021-01-30 11:42 GMT   |   Update On 2021-01-30 11:42 GMT
கொரோனாவால் வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உள்ளாட்சி வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று விக்கிரமராஜா கூறினார்.
திருப்பனந்தாள்:

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் மாநில வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்தநிலையில் வணிகம் முடக்கப்பட்டிருந்த 2020- 21 நிதியாண்டு மற்றும் அதற்கு முன்பு 2 ஆண்டுகள் என 3 ஆண்டுகளுக்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என நகராட்சிகள் சார்பில் வரி கேட்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தொழில், வணிகம் செய்யக்கூடாது என்று தடைவிதித்து விட்டு பின்னர் அக்காலகட்டத்துக்கு வரியும் கட்ட வேண்டும் என கேட்பது விந்தையாக உள்ளது.

எனவே கடந்த ஓராண்டுக்கான ஊராட்சி மற்றும் உள்ளாட்சி வரிகள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கொலை மற்றும் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணையை துரிதப்படுத்தி 3 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டுக்குள் புகுந்து இரட்டை கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சூழ்நிலை காரணமாக போலீசார் என்கவுண்ட்டர் செய்ததை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News