செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல்காந்திக்கு கரூரில் தயாராகும் பாரம்பரிய மண்பானை சமையல்

Published On 2021-01-23 07:34 GMT   |   Update On 2021-01-23 07:34 GMT
கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.
கரூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட் சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யும் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராகுல்காந்தி மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டுகளித்தார். ராகுலின் சுற்றுப்பயணத்துக்கு ராகுலின் தமிழ் வணக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் மாலையில் திருப்பூர் செல்கிறார். பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

நாளை மறுநாள் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரத்தில் ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
 
பின்னர் கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு 11.40 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு 12.30 மணி அளவில் வாங்கல் மாரி கவுண்டன்பாளையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாட இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மதியம் 1.30 மணி அளவில் கரூர்-திண்டுக்கல் பை-பாஸ் ரோட்டில் மலைக்கோவிலூர் தகரகொட்டாய் இந்திராநகர் பகுதியில் உள்ள முருக விலாஸ் மண்பானை சமையல் உணவகத்தில் மதிய உணவு சாப்பிடுகிறார்.

இதையடுத்து அவருக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் குருபிரசாத் கூறினார். மேலும் அவர் கூறும்போது, 9 ஆண்டுகளாக இந்த முருக விலாஸ் ஓட்டலை என் தந்தை நடத்தி வருகிறார். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. எங்கள் ஓட்டலில் ராகுல்காந்தி மதிய உணவு சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஏற்கனவே சஞ்சய்தத் பலமுறை சாப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் எங்கள் ஓட்டலை தேர்வு செய்து இருக்கலாம் என நினைக்கிறோம்.

நான் எம்.பி.ஏ. படித்து கொண்டு ஓட்டலையும் கவனித்து வருகிறேன். எனது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் செல்வமணி ஆகியோரே பிரதான சமையலர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சமைக்கும் உணவையே ராகுல் காந்தி சாப்பிட உள்ளார்.

அவருடன் வருகை தர உள்ள தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என 100 பேருக்கு அசைவ உணவு சமைக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். ராகுல் உள்ளிட்ட 50 பேர் மட்டுமே ஓட்டலுக்குள் அமர்ந்து சாப்பிட முடியும். மற்றவர்கள் பபே முறையில் சாப்பிடுவார்கள்.

ராகுல்காந்திக்கு மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நாட்டுக்கோழியில் தயாராகும் உப்புக்கறி (மசாலா இல்லாத பாரம்பரிய சமையல்), முட்டை கிரேவி, சாதம், சிக்கன் தண்ணீர் குழம்பு, தயிர், ரசம், நாட்டுச்சக்கரை பருப்பு பாயாசம், கற்பூர வள்ளி பழம், பாக்கு, வெற்றிலை தயார் செய்ய உள்ளோம். இதுவே அவருடன் வரும் 100 பேருக்கும் தயாராகிறது.

ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு நேற்றைய தினம் திருநாவுக்கரசர் எம்.பி. இங்கு வந்து சாப்பிட்டார். இன்று மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வருவதாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கமாக தினமும் 200 பேருக்கு மதிய உணவு சமைப்போம்.

மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டுமே ஓட்டல் திறக்கப்பட்டு இருக்கும். அனைத்து திங்கட்கிழமையும் விடுமுறை விடப்படும். ராகுல் காந்திக்காக வருகிற 25-ந்தேதி எங்கள் ஓட்டலை திறக்க இருக்கிறோம். வெளி நபர்களுக்கு அன்றைய தினம் அனுமதி கிடையாது என்றார்.

முருக விலாசில் சாப்பிடும் ராகுல்காந்தி அரவக்குறிச்சி தொகுதியில அதிகம் சாகுபடி ஆகும் முருங்கை மற்றும் கண்வலிகிழங்கு தோட்டங்களை பார்வையிடுகிறார்.

Tags:    

Similar News