செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.19,500 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2021-01-19 02:28 GMT   |   Update On 2021-01-19 02:28 GMT
தமிழக அரசுக்கு தரவேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத்தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று் நிர்மலா சீதாராமனிடம், ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
சென்னை:

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, மாநில நிதி மந்திரிகள் உடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக்காட்சி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு பங்கேற்றார்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நகர்ப்பகுதிகளை அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம். நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்காக 14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 577.98 கோடி அனுமதித்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிதி கிடைக்கப்பெறாதது நியாயமற்றது. எனவே, இந்த நிலுவை தொகையை விடுவிக்கவேண்டும். தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். இதை சரி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அதில் ஒன்று, ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம் ஆகும். தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து இதற்கான நிதி கோரப்பட்டுள்ளது. நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தின் கீழ் காவிரி நதி மற்றும் அதன் துணை நதிகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தேசிய நதி நீர் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்பட பல்வேறு வகைகளில் மத்திய அரசு தரவேண்டிய ரூ.19,591.63 கோடி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும். நாங்கள் அளித்த பல்வேறு ஆலோசனைகளை மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டில் சேர்த்து, இந்திய பொருளாதாரத்தின் விரைவான மற்றும் நீடித்த வளர்ச்சி களம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள்பட தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News