செய்திகள்
ரெயில் மறியல் போராட்டம்

ஊட்டி மலை ரெயிலை தனியார் நிறுவனம் இயக்குவதை கண்டித்து ரெயில் மறியல்

Published On 2020-12-12 08:22 GMT   |   Update On 2020-12-12 08:22 GMT
ஊட்டி மலை ரெயிலை தனியார் நிறுவனம் இயக்குவதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்படுகின்றது.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்ட மலைரெயில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயிலை இயக்க டி.என்.43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தனியார் நிறுவனம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி சிறப்பு மலை ரெயிலை இயக்கியது. தொடக்க நாள் அன்று மலை ரெயிலில் முதல் வகுப்பு பெட்டியின் முன் பக்கம் அந்த தனியார் நிறுவன ஆரஞ்சு நிற விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆரஞ்சு நிற சீருடை அணிந்த பெண்களும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

தனியார் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியது. மலை ரெயிலின் முன்பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த ஆரஞ்சு நிற ஸ்டிக்கர் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் உதயகிரி சிறப்பு மலை ரெயிலை இயக்க தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் வழக்கம் போல் காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மலை ரெயிலை மீண்டும் இயக்க கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் ஊட்டி மலை ரெயில் மீட்புக் குழு சார்பாக இன்று மலை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும் ஊட்டி மலை ரயில் மீட்புக் குழு தலைவர் பாஷா முன்னிலையிலும் பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் ஊட்டி மலை ரயில் மீட்புக்குழுவினர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை முழங்கிக்கொண்டே ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

அப்போது பயணிகள் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்கள் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையம் நோக்கி ஓடிச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும் சாலை மறியலில் ஈடுபட சென்றவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ரெயில் மறியல் போராட்டத்திற்கு ஈடுபட முயற்சி செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் வாகனம் மூலம் தனியார் திருமண மண்டபம் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் ரெயில் நிலைய சாலையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Tags:    

Similar News