செய்திகள்
அமராவதி அணை

அமராவதி அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் திறப்பு

Published On 2020-12-06 08:14 GMT   |   Update On 2020-12-06 08:14 GMT
அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளது அமராவதி அணை. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர் போன்ற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். இதில் 88 அடி உயரம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் அமராவதி அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் பொதுப்பணித்துறை சார்பில் 3 மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீர் அமராவதி ஆற்றில் கலந்து கரூரில் ஓடும் காவிரியில் கலக்கிறது.

இதனால் உடுமலையில் இருந்து கரூர் வரை உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைளை அந்தந்த தாசில்தார்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் கால்நடை மற்றும் உடமைகளுடன் வெளியேறினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,264 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1150 கன அடி வெளியேற்றப்படுகிறது. இதனால் 2-வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம், அமராவதி நகர், குமரலிங்கம்,கொழுமம், ருத்ராபாளையம், மடத்துக்குளம், கணியூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட காரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று தொடர் மழையால் 5-வது நாளாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News