செய்திகள்
மாதிரி பள்ளிகளை மேம்படுத்துவதற்கான குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

2 மாதிரி பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்- கலெக்டர் தகவல்

Published On 2020-11-29 04:20 GMT   |   Update On 2020-11-29 04:20 GMT
தர்மபுரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 2 மாதிரி பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் கார்த்திகா கூறினார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

தமிழகத்தில் 120 கல்வி மாவட்டங்களில் ஏற்கனவே மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள கல்வி மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக தேர்வு செய்து அந்த பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி கற்கும் தரத்தை மேலும் உயர்த்தவும் இப்பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மேம்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மாதிரி பள்ளிகளுக்கு இதர பொருட்களை வாங்க தேவையான நிதியை உரிய குழுவின் ஒப்புதலுடன் பெற்று செலவினம் மேற்கொள்ளவும், இதற்கான பட்டியலை மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்து மாநில குழுவின் ஒப்புதலை பெற உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும் மாதிரி பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா தேவி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம், ஒன்றியக்குழு உறுப்பினர் மாது ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News