செய்திகள்
மழையின்றி காய்ந்து கிடக்கும் விவசாய விளை நிலம்

மணப்பாறை பகுதியில் மழையின்றி காய்ந்து கிடக்கும் விளைநிலங்கள்

Published On 2020-10-31 04:47 GMT   |   Update On 2020-10-31 04:47 GMT
மணப்பாறை பகுதியில் போதிய மழை பெய்யாததால் விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா? என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 3 ஒன்றியங்களிலும் 88 ஊராட்சிகள் உள்ளன. இதுமட்டுமின்றி மணப்பாறை நகராட்சிப் பகுதியில் 27 வார்டுகளும், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சியும் உள்ளது. இத்தனை பகுதிகள் இருந்தாலும் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லை. இதனால், இந்த பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளும் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. உழவிற்கு சிறந்ததாக மணப்பாறை மாடுகள் விளங்குகின்றன. ஆகவே தான், மணப்பாறை மாட்டுச் சந்தை பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடுகள் நல்ல விலை பேசி வாங்கி செல்லப்படுகின்றன.

தற்போது பல மாவட்டங்களில் நெல், நல்ல விளைச்சல் கண்டுள்ளன. ஆனால், மேற்கண்ட ஒன்றிய பகுதிகளில் பெரிய அளவில் விளைச்சல் இல்லை. மேற்கண்ட ஒன்றிய பகுதிகளில் வாய்க்கால் பாசனமோ, ஆற்றுப் பாசனமோ இல்லாததால் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணறு மற்றும் பருவமழையை நம்பித்தான் மானாவாரி பயிரிடப்படுகிறது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மணப்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கிணறுகளும் காய்ந்து கிடக்கின்றன.

போதிய மழை இல்லாததால் பெரும்பாலான விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால், வங்கிகளில் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றனர். சிறிய விவசாயிகள் பலர், விவசாயத்தை கை விட்டு பிழைப்பு தேடி திருப்பூர், கோவை போன்ற இடங்களுக்கு சென்று விட்டனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பருவமழை பெய்யவில்லை என்றாலும், பெய்யும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்இப்பகுதி விவசாயிகள்.
Tags:    

Similar News