செய்திகள்
கங்காதரன்

செல்போன் மூலம் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்- டிரைவர் கைது

Published On 2020-10-08 08:59 GMT   |   Update On 2020-10-08 08:59 GMT
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், தமிழக சட்டத்துறை அமைச்சராகவும் இருப்பவர் சி.வி.சண்முகம். இவருடைய செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், அமைச்சர் சி.வி.சண்முகத்தை தகாத வார்த்தையால் திட்டியதோடு இன்னும் 2 நாட்களில் கூலிப்படையின் மூலம் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவரது அறிவுரையின்பேரில் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு துணைச்செயலாளர் சஞ்சய்காந்தி, இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதோடு அவருடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மனோகர், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கங்காதரன் (வயது 45) என்பது தெரியவந்தது. உடனே விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று திருச்சி சிறுகளப்பூருக்கு விரைந்து சென்று கங்காதரனை மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், டிராக்டர் டிரைவராக இருப்பதும், குடிபோதையில் அமைச்சரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து கங்காதரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News