செய்திகள்
தங்க நகைகள்

மதுரையில் பூட்டியிருந்த வீட்டுக்கதவை திறந்து 100 பவுன் நகை கொள்ளை

Published On 2020-09-08 02:06 GMT   |   Update On 2020-09-08 02:06 GMT
மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி வீட்டின் கதவை திறந்து 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை அவனியாபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் போஸ்(வயது 55). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் வட்டி பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள்(50). நேற்று போஸ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

மாலையில் மாரியம்மாள் தனது மகளுடன் வீட்டை பூட்டி விட்டு தெற்குவாசல் பகுதியில் ஜாதகம் பார்க்க சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து போது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன.

உடனே மாரியம்மாள் இதுகுறித்து தனது கணவருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 100 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்கள் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. இதற்கிடையில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் பழனிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் போஸ் வீட்டினர் வெளியே செல்லும்போது கதவை பூட்டி விட்டு சாவியை அங்கேயே மறைவான இடத்தில் வைத்து சென்றுள்ளனர். அதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் உண்மையில் 100 பவுன் நகை தான் கொள்ளை போனதா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நகை கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News