செய்திகள்
தோவாளை பூ மார்க்கெட்

ஓணம் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனை

Published On 2020-08-31 09:52 GMT   |   Update On 2020-08-31 09:52 GMT
தோவாளை பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 தினங்களாகவே 100 டன் பூக்கள் விற்பனையாகி உள்ளன.
நாகர்கோவில்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் பூக்கள் விற்பனை அதிகளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாகவே தோவாளை பூ மார்க்கெட்டில் பூ விற்பனை கடும் சரிவை சந்தித்தது.

விற்பனை குறைந்ததால் மார்க்கெட் வியாபாரிகள் மட்டுமின்றி பூக்கள் பயிரிட்டிருந்த விவசாயிகளும் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியதில் இருந்தே தோவாளை பூ மார்க்கெட் கேரள வியாபாரிகள் வருகையால் களைகட்டி காணப்படும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கேரளாவில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்று பூக்கள் வாங்க முதலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வியாபாரிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

ஓணம் பண்டிகைக்கு 2 நாள் முன்னதாக பூக்கள் வாங்க பக்கத்து மாநிலங்களுக்கு செல்லலாம் என கேரள அரசு அனுமதி வழங்கிய பிறகே கேரள வியாபாரிகள் பூக்கள் வாங்குவதற்காக குமரி மாவட்டத்திற்கு அதிகளவில் வரத்தொடங்கினர்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இருப்பது போல் இல்லாமல் குறைவான அளவே வியாபாரிகள் வந்தனர். இதனால் தோவாளை பூ மார்க்கெட்டில் கடந்த 3 தினங்களாகவே பூக்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் 20 டன் பூக்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 20 டன் பூக்கள் விற்பனையாகின. கடந்த 2 நாட்களில் மொத்தம் 40 டன் பூக்கள் விற்பனையாகி உள்ளன. வழக்கமாக ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் மட்டும் தோவாளை பூ மார்க்கெட்டில் 100 டன் வரை பூக்கள் விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 3 நாட்களையும் சேர்த்தே 100 டன் பூக்கள் மட்டும் விற்பனையாகி உள்ளன.

அனைத்துவித மலர்களும் விற்பனையாகிவிட்ட நிலையில் கேந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து உள்ளன. அவை இன்று விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் உள்ளனர்.

Tags:    

Similar News