செய்திகள்
சாதனை படைத்த மாணவிக்கு தளவாய்சுந்தரம், கலெக்டர் சான்றிதழ் வழங்கினர்

230 திருக்குறளை 3 நிமிடத்தில் ஒப்புவித்து குமரி மாணவி உலக சாதனை

Published On 2020-08-15 10:59 GMT   |   Update On 2020-08-15 10:59 GMT
குமரியில் 8-ம் வகுப்பு மாணவி 230 திருக்குறளை 3 நிமிடம் 25 வினாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் பாராட்டினர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் சொத்தவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி யூதிஷா. இவர் திருக்குறளை மனப்பாடமாக சொல்வதில் திறமை பெற்றவர். இந்த மாணவி, 5 நிமிடத்தில் 230 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் ட்ரம்ப் உலக சாதனைக்காக மனப்பாடமாக திருக்குறளை ஒப்புவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவி யூதிஷா 3 நிமிடங்கள் 25 வினாடிகளில் 230 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து (தனக்கு வழங்கப்பட்டுள்ள 5 நிமிடங்களுக்கு முன்பாகவே) உலக சாதனை படைத்தார்.

ட்ரம்ப் உலக சாதனை ஆய்வு மையத்தின் தென் மண்டல நடுவர் சம்பத்குமார் இந்த நிகழ்வை பதிவு செய்தார். இதற்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் மாணவி பி.கிருத்திகா ஹரிணி என்பவர் 200 திருக்குறளை 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை புரிந்திருந்தார். இந்த சாதனையை தற்போது குமரி மாணவி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து உலக சாதனைக்கான சான்றிதழ் மாணவி யூதிஷாவிற்கு வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து, சாதனை புரிந்த மாணவி யூதிஷாவை, தளவாய் சுந்தரம், பிரசாந்த் வடநேரே ஆகியோர் பாராட்டினர். மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்திட வேண்டும் என மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் அய்யப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பள்ளி தலைமை ஆசிரியர் அகிலாமதி, ராதாகிருஷ்ணன், சண்முக சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தளம் பேரூர் செயலாளர் சிவகந்தன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
Tags:    

Similar News