செய்திகள்
கொலை செய்யப்பட்ட சுனில்.

விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை - 3 வாலிபர்கள் கைது

Published On 2020-08-05 06:45 GMT   |   Update On 2020-08-05 06:45 GMT
ஓசூர் அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னயப்பா. இவருடைய மகன் சுனில் (வயது 22). இவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வந்தார். 

இவருக்கும் கொத்தப்பள்ளியை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே கைப்பந்து விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நவீன் தரப்பினர் கொடியாளம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (19) என்பவர் மூலமாக சுனிலை கொத்தப்பள்ளியில் உள்ள தனியார் லேஅவுட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு நவீன், ஜனார்த்தனன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த அனில் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து சுனிலை சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த சுனில் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சுனில் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவரது கால்கள் அகற்றப்பட்ட நிலையில் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பாகலூர் போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நவீன், அனில், ஜனார்த்தனன் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தநிலையில் அந்த வழக்கு கொலை வழக்காக நேற்று மாற்றப்பட்டது. 

இதற்கிடையே கொடியாளம், கொத்தப்பள்ளி பகுதியில் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News