செய்திகள்
ராமதாஸ்

வாடகை கார்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-08-04 11:09 GMT   |   Update On 2020-08-04 11:09 GMT
வாடகை கார்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை கார் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். பல வழிகளில் வருவாய் இழப்பையும், வாழ்வாதார பாதிப்புகளையும் எதிர் கொண்டு வரும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இத்தகைய சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக போக்குவரத்து இயங்காததால், வாடகை கார்களின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களால் ஒரு ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியவில்லை.

இத்தகைய சூழலில் அவர்களை மேலும் மேலும் பண அழுத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக்கக் கூடாது. எனவே, கொரோனா சூழல் சீரடையும் வரை அனைத்து வகையான வாடகை கார்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News