செய்திகள்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-23 11:21 GMT   |   Update On 2020-07-23 11:21 GMT
சாயர்புரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜ் நகர் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது விதிமுறைகளுக்கு மாறாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் அருகே உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, ஊர் மக்கள் சார்பில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மதுக்கடையை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரையிலும் கடை அகற்றப்படவில்லை.

இதனை கண்டித்தும், கோர்ட்டு உத்தரவின் பேரில், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், டாஸ்மாக் கடை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளருமான ஞானசேகர் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவி ஜெபக்கனி, துணை தலைவர் ஜெனிட்டா, சமூக ஆர்வலர் ஜெபஸ்டின் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனைமீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 10 பேர் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னதாக இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி, கடையின் முன்பாக மது பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News