செய்திகள்
மத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டபோது எடுத்த படம்.

பூட்டிய வீட்டில் பெண் பிணம் - கொரோனா பீதியில் உடல் அடக்கம் செய்ய தயங்கிய அதிகாரிகள்

Published On 2020-07-15 09:50 GMT   |   Update On 2020-07-15 09:50 GMT
மத்தூரில் பூட்டிய வீட்டில் பெண் பிணமாக கிடந்தார். கொரோனா பீதியில் இறந்த பெண்ணின் உடலை எடுக்க அதிகாரிகளும், பொதுமக்களும் அடக்கம் செய்ய தயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வசித்து வருபவர் 30 வயது பெண். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அந்த பெண் தனது சொந்த ஊரான மத்தூருக்கு வந்தார். அவர் திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மத்தூர் வந்த பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் காய்ச்சல் அறிகுறியுடன் பெண் இருப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் ஆம்புலன்சுடன் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அந்த பெண் மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் உடலை அடக்கம் செய்ய அந்த பகுதி மக்களிடம் கூறினார்கள். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக அந்த பெண் இறந்திருக்கலாம் என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே ஏற்பட்டது.

இதனால் அவர்கள் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை. அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும், வருவாய்த்துறைக்கும், காவல் துறைக்கும், ஊராட்சி மன்றத்திற்கும் தகவல் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் உள்ளூர் இளைஞர்கள் மத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

அவர்கள் அங்கு வந்திருந்த போச்சம்பள்ளி தாசில்தார் நிரஞ்சன் குமார், வருவாய் ஆய்வாளர் ரகமத்துல்லா, கிராம நிர்வாக அலுவலர் லெனின் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறந்த உடலை அடக்கம் செய்வது தொடர்பான ஏற்பாடுகளை அரசு துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறினார்கள். ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொரோனா பீதியால் அந்த உடலை அடக்கம் செய்ய தயக்கத்துடன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேரம் ஆக ஆக பதற்றம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து காலையில் இருந்து நேற்று மாலை 5 மணி வரையில் உடல் அடக்கம் செய்ய முடியாமல் வீட்டிலேயே கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், முழு கவச உடைகளை அணிந்து கொண்டு அந்த பெண்ணின் உடலை சுடுகாடு வரை எடுத்து சென்று அந்த பெண்ணின் மத வழக்கப்படி உடலை அடக்கம் செய்தனர்.

இதனால் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News