செய்திகள்
கைது

தடையை மீறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- எம்.எல்.ஏ. உள்பட 2,349 பேர் கைது

Published On 2020-06-06 01:30 GMT   |   Update On 2020-06-06 01:30 GMT
தி.மு.க. பிரமுகர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் தடையை மீறி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கலந்துகொண்ட கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 2,349 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தி.மு.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கோவை மாவட்ட தி.மு.க. அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்காததால் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

புறநகரான பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. நகர செயலாளர் டாக்டர் வரதராஜன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லதா செல்வராஜ் உள்பட95 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 2,349 பேர் கைதானார்கள். இதில் பெண்கள் 196 பேர் ஆவார்கள். கைதானவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News