செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா விழிப்புணர்வு- மகனை மாட்டு தொழுவத்தில் தனிமைப்படுத்திய தாய்

Published On 2020-04-29 08:47 GMT   |   Update On 2020-04-29 08:47 GMT
கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் மும்பையில் இருந்து வந்த மகனை மாட்டு தொழுவத்தில் தனிமைப்படுத்திய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னாளப்பட்டி:

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபர், மும்பையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடன் மதுரையை சேர்ந்த மற்றொரு வாலிபரும் வேலை செய்கிறார். அவர்கள் மும்பையில் இருந்து காய்கறி ஏற்றி செல்லும் லாரி மூலம் சேலம் வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மதுரை நோக்கி சென்ற மற்றொரு லாரியை பிடித்து சொந்த ஊருக்கு திரும்பினர். மும்பையில் இருந்து மகன் வரும் விவரம் அவரது தாய்க்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மகனை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு அந்த வாலிபர் மறுத்ததோடு நேராக வீட்டுக்கு வந்தார். நீண்ட நாட்களுக்கு பின் வந்த மகனை பாசத்துடன் வரவேற்ற தாய் மகனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மாறாக வாசலில் தடுத்து நிறுத்தினார்.

பின்னர், மும்பையில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. நீ மருத்துவமனை செல்லாமல் ஏன் வீட்டுக்கு வந்தாய் என்று கூறி அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் தனிமைப்படுத்தினார்.

இரவு முழுவதும் அந்த வாலிபர், மாட்டு கொட்டகையிலேயே தூங்கினார். பின்னர் மறுநாள் விடிந்ததும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து மகனை கொரோனா பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தாயார் அனுப்பிவைத்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என தெரியவந்தது. அதன்பிறகே தனது வீட்டுக்குள் மகனை அனுமதித்தார். பெற்ற மகன் என்றும் பாராமல் கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் தனிமைப்படுத்திய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News