செய்திகள்
பள்ளிவாசல் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி: 2 போலீஸ் அதிகாரிகள் காயம்

Published On 2020-04-04 04:04 GMT   |   Update On 2020-04-04 04:04 GMT
தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது நடந்த கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
தென்காசி :

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தென்காசி நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மதியம் தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த பள்ளிவாசலுக்கு விரைந்தனர். அங்கு கூடி இருந்தவர்களிடம், ‘இப்படி கூட்டமாக கூடக்கூடாது, அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்’ என்று கூறினர்.

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது நாற்காலிகள் வீசப்பட்டன. இதனால் கூட்டத்தை கலைக்கவும், தாக்குதலை தடுக்கவும் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தின்போது, போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார், 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News