செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான வாடகையை குறைக்க பரிசீலனை- ஓ.பன்னீர் செல்வம்

Published On 2020-03-20 08:20 GMT   |   Update On 2020-03-20 08:20 GMT
ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான வாடகையை குறைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கான வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதன் மீது ஜெ.அன்பழகன் பேசுகையில், 1962-ல் இந்த வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த கட்டிடம் மிகப்பழமையானது.

இப்போது இந்த வீடுகளுக்கு 300 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆயிரமாக இருந்த வாடகை ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தனியார் வீடுகளுக்கு கூட ஆண்டுக்கு ரூ.500, ரூ.1000 உயர்த்துவார்கள். எனவே வாடகையை குறைக்க வேண்டும். பராமரிப்பு கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

லாயிட்ஸ் காலனியில் அரசு அலுவலர் குடியிருப்பு, வாரிய வாடகை குடியிருப்பு என இரு வகையான குடியிருப்புகள் உள்ளன. வாரிய வீடுகளின் வாடகை அரசு பொது ஒதுக்கீடு வீடுகளுக்கான வாடகையுடன் ஒப்பிட்டதில் வாரிய வாடகை மிகவும் குறைவாக இருந்தது.

இதனால் அதேபோல் வாடகையை உயர்த்தி உள்ளோம். இதில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்துள்ளது. ஆனாலும் பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளதன் காரணமாக வாடகையை குறைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News