செய்திகள்
விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார்- பிரேமலதா

Published On 2020-03-09 04:53 GMT   |   Update On 2020-03-09 04:53 GMT
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தே.மு.தி.க. பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை:

திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க. சார்பில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி தலைவர் விஜயகாந்த் பேசுகையில், அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் வந்து நிற்பேன். எல்லோரும் பாதுகாப்பாக ஊருக்கு செல்லுங்கள் என்றார்.

தொடர்ந்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:-

மீனாட்சி அம்மன் அருளால் விஜயகாந்த் நலம் பெற்று வருகிறார். விரைவில் அவர் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்களில் பேசுவார். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தே.மு.தி.க. பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார். எனவே தொண்டர்கள் இப்போதே விழிப்புணர்வுடன் கட்சி பணியாற்ற வேண்டும்.


குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சில கட்சிகள் நம்மை சாதி, மதத்தால் பிரிக்க முயல்கிறது. தமிழகத்தை வன்முறை பூமியாக மாற்ற நினைக்கின்றனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியுரிமை பெறாமல் இருந்து கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்குத்தான் குடியுரிமை திருத்த சட்டம். இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் கட்சியாக களத்தில் நிற்பது தே.மு.தி.க.தான்.

டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். அப்பாவி பெண்கள் டிக்- டாக் மூலம் சீரழிந்து வருகின்றனர். உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிக்-டாக் செயலியில் இருந்து வெளியேறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News