செய்திகள்
விவசாயிகள் மறியல்

ஆரணியில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்

Published On 2020-02-17 05:33 GMT   |   Update On 2020-02-17 05:33 GMT
ஆரணி ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை எடை போட மறுத்ததால் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி:

ஆரணி மில்லத் ரோட்டில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, ஆரணி, சேவூர், இரும்பேடு, எஸ்.வி.நகரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல், பயிறு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை இலவசமாக எடை போட வேண்டும். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ஒரு மூட்டை எடைபோட 8 ரூபாய் தரவேண்டும் என விவசாயிகளிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

மேலும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடாமலும் அறையில் வைக்காமலும் திறந்த வெளியிலேயே வைத்துள்ளனர்.

இதனால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று காலை ஓழுங்குமுறை விற்பனை கூடத்தின் வெளியே ஆரணி- வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஒழுங்கு விற்பனைகூட கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News