செய்திகள்
கோப்பு படம்

அம்பத்தூர் அருகே காரில் கடத்தப்பட்ட வாலிபர் புதுவையில் மீட்பு - 3 பேர் கைது

Published On 2020-01-29 11:38 GMT   |   Update On 2020-01-29 11:38 GMT
அம்பத்தூர் அருகே காரில் கடத்தப்பட்ட வாலிபரை போலீசார் புதுவையில் மீட்டதையடுத்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூர் அருகே உள்ள ஓரகடம் செல்வவிநாயகர் தெருவை சேர்ந்தவர் திலீப் குமார்(34).

நேற்று காலை வீட்டின் அருகே திலீப்குமார் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த 5 பேர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவரை காருக்குள் இழுத்து கடத்தி சென்றனர். திலீப்குமாரின் மனைவி சுதா முன்னிலையிலே அவர் காரில் கடத்தப்பட்டார்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமி‌ஷனர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியேர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

காரின் பதிவு எண்ணை வைத்து அது செல்லும் இடத்தை கண்காணித்தனர். அந்த கார் புதுச்சேரி நோக்கி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து சென்றனர்.

போலீசார் பின் தொடர்வதை அறிந்ததும் கடத்தல்காரர்களில் 3 பேர் புதுச்சேரி முந்தையால்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். காரில் கடத்தப்பட்ட வாலிபர் திலீப்குமாரை போலீசார் மீட்டனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

விசாரணையில் சரண் அடைந்தவர்கள் சரவணன், தமிழ்சந்திரன், நரேஷ்குமார் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சிவா, சேக் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

திலீப்குமார் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் தரகராக இருக்கிறார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.10 லட்சத்தை வாங்கி உள்ளார்.

ஆனால் அவர் சொன்னபடி வேலைக்கு அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே இது தொடர்பான பிரச்சினையில் திலீப்குமார் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

Similar News