செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

தமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2020-01-22 08:07 GMT   |   Update On 2020-01-22 10:03 GMT
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்கும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பெரியகோவில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தின் பெருமை மற்றும் கட்டிடக்கலை நுட்பம் ஆகியவற்றின் பெருமையை தாங்கியுள்ள இந்த கோவிலின் குட முழுக்கு வருகிற 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழ் ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிப்ரவரி 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் செய்யும்போது குறித்த விவரங்கள் அடங்கிய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

தமிழ் ஆகம விதிப்படி தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் கூறினார்.



இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், குடமுழுக்கு நிகழ்வு மட்டும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மத்திய தொல்லியல் துறை ஆணையர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் தேவஸ்தான நிர்வாகி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27-ந் தேதி ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News