search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறநிலையத்துறை"

    • காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

    மண்ணச்சநல்லூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

    திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பிள்ளையார்கோவில் அருகில் தனது பாதயாத்திரை தொடங்கினார்.

    பின்னர் மலையப்பபுரம், சந்தைப்பேட்டை வழியாக லால்குடி ரவுண்டானா பகுதியில் அந்த யாத்திரை நிறைவு பெற்றது.

    பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது;-

    லால்குடி தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறினார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை.

    காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இன்று வரை அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என தங்களை பலப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

    டாஸ்மாக் மதுவினால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதிகம் பாதிப்பு இல்லாத கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது,

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை எடுத்து இந்து சமய அறநிலைத்துறை பெருந்திட்டவளாகம் கட்டுகிறேன் என்ற பெயரில் ரூ. 422 கோடியை எடுத்துள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கிறது. குறைந்த பட்சம் ரூ. 1000 இருந்தால் தான் கோவில் பக்கம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

    2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலைத்துறை என்ற ஒரு துறையே இருக்காது. குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

    முன்னதாக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பார்வையாளர் யோகிதாசன், முன்னாள் மாவட்ட தலைவர் சேது அரவிந்த், மாநில பேச்சாளர் பாடகர் வி.என். தனசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், குமார், சண்முகம், சூரியகாந்த், ஒன்றிய தலைவர்கள் கணேசன், கண்ணன், பாலகிருஷ்ணன், கார்த்தி, முருகேசன், மற்றும் கோவிந்தராஜ், இலக்கியா, சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.
    • இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.

    ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.

    இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

    • கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறைதான்.
    • தமிழகத்தின் இந்த வரலாறுகள் தெரியாமல் மோடி பேசி இருக்கிறார்.

    சென்னை:

    பல மாநிலங்களில் அரசின் பிடியில் இந்து கோவில்கள் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது. தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் உள்ளது. அதை எதிர்த்து காங்கிரஸ் குரல் கொடுக்குமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

    அதை தொடர்ந்து தமிழக பா.ஜனதாவினரும் இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை அரசின் அறநிலையத்துறை தான் இந்து ஆலயங்களை சீரமைத்தது. தொடர்ந்து சிறப்பாக சீரமைத்து கொண்டிருக்கிறது.

    அதற்கு முன்பு தனியாரிடமும், வசதி படைத்தவர்களிட மும் சிக்கி எளியவர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது எல்லோரும் செல்ல முடிகிறது. நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்கிறது.

    தலித்துகளும் கோவில்களுக்கு சென்று வழிபடலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்சபட்சமாக தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வரன், கக்கன் ஆகியோரை அறநிலையத்துறை அமைச்சராக்கினார் காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர். கொள்ளையடித்தவர்களிடம் இருந்து கோவில்கள் மீட்கப்பட்டுள்ளது.

    கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறைதான். தமிழகத்தின் இந்த வரலாறுகள் தெரியாமல் மோடி பேசி இருக்கிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் கோவில்கள் கோவில்களாக இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் உள்ளது
    • நிலம் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    நாகர்கோவில் :

    மார்த்தாண்டம் முஞ்சி றை திருமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய மகாதேவர் கோவி லுக்கு சொந்தமான கோவில் நிலங்களை தனி யார் கல்லூரி ஒன்று ஆக்கிர மித்து வைத்துள்ளது.

    இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் கோர்ட் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (குமரி மாவட்ட கோவில்கள், சுசீந்திரம்) பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    அப்போது கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், தொகுதி கண்காணிப்பாளர் சிவக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதீஷ்குமார், ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தி.மு.க முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    • அறநிலையத்துறை சார்பில் 20-ந்தேதி பேச்சுவார்த்தை
    • தற்காலிகமாக பள்ளத்தை மூடுவதற்கு உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    தென்தாமரைகுளம் :

    தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ள தாமரைகுளம் பதி முன்பு இந்து அறநிலையத்துறை சார்பில் நுழைவுவாயில், சுற்றுசுவர் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒரு தரப்பினர் மனு அளித்த னர்.

    இது தொடர்பான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நேற்று மாலை பதி முன்பு நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் ராஜன், உதவி ஆணையர் தங்கம், செயல் அலுவலர் ரெகு, தாசில்தார் சஜித் ஆகியோர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் வருகிற 20-ந்தேதி அறநிலையத்துறை அலுவலகத்தில் வைத்து மீண்டும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் அஸ்திவாரம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள், வயதானவர்கள் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது என பெண்கள் உட்பட பலர் தெரிவித்தனர். இதனையடுத்து தற்காலிகமாக பள்ளத்தை மூடுவதற்கு உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ரூ.1½ கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களையும் பொருட்களையும் ராயபுரம் போலீசாரின் உதவியோடு வெளியேற்றினர்.

    ராயபுரம்:

    ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமான 1200 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை தனியார் நபர் ஆக்கிரமித்து முதல் தளத்தோடு 9 கடைகள் மற்றும் 3 வீடுகள் இருந்தன.

    இதில் நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் சங்கர் என்பவர் பராமரிப்பில் அற நிலையத்துறை ஒப்படைத்த தாகவும் கீழ்தளத்தில் உள்ள கடைகளுக்கு வரும் வாடகை மட்டும் அவர் எடுத்து கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தரை தளம் மட்டும் அல்லாமல் மேல் தளத்திலும் சங்கர் வசிக்கும் 3 வீடுகள் உட்பட 9 கடைகளையும் அதற்கான வாடகையையும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக குத்தகைக்கு விட்டு சங்கர் அனுபவித்து வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி நேற்று அற நிலைய துறை அதிகாரிகள் ரூ.1½ கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களையும் பொருட்களையும் ராயபுரம் போலீசாரின் உதவியோடு வெளியேற்றினர். தொடர்ந்து வீடு, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

      சென்னை:

      அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

      பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 8 கோவில்களிலும் ஒரு வேளை அன்னதானத் திட்டம் 764 கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பின் படி 2 கோவில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒரு வேளை அன்னதானத் திட்டமும் செப்டம்பர் மாதத்திற்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

      ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் இதுவரை திருச்செந்தூர், பெரியபாளையம், பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, சமயபுரம், மருதமலை, சிறுவாபுரி, மேல்மலையனூர் உள்ளிட்ட 15 கோவில்களில் ரூ.1,495 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்தாண்டு மயிலாப்பூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, பேரூர் ஆகிய 5 இடங்களில் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கூடுதலாக மதுரை மற்றும் திருவானைக்காவலில் நடத்தப்படவுள்ள மகா சிவராத்திரி விழா குறித்து விவாதிக்கப்பட்டது.

      கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்திடும் வகையில் ரோவர் கருவி மூலம் இதுவரை ரூ.1,34,547 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

      அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த 150 அர்ச்சகர்களை கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக மாதம் ரூ.6,000 என்ற ஊக்கத்தொகையுடன் நியமனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் பணி நியமனங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்ததி தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவருமே நிரந்தர பணியாளர்கள் ஆக்கப்படுவார்கள்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
      • சமுதாய நிர்வாகிகள் 21-ந்தேதியான நேற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

      நாகர்கோவில் :

      ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் இந்து நாடார் சமுதா]யத்திற்குட் பட்ட இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழி முப்பந்தல் (மேற்கு) பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களை இந்து நாடார் சமுதாயத்தின் சார்பில் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

      இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தும் நட வடிக்கையினை எடுத்தது. கடந்த 17-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோவில் (கிழக்கு) செயல் அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் (மேற்கு) நிர்வாக பொறுப்பு களை தற்போது பார்த்து வரும் சமுதாய நிர்வாகிகள் 21-ந்தேதியான நேற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

      இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து காலை மற்றும் இரவிலும் பொதுமக்கள் கோவிலில் குவியத்தொடங்கினர். இந்நிலையில் நேற்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் விவரங்களை கேட்டு அறிந்தார். பின்னர் சமுதாய நிர்வாகிகளுடன் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் (கிழக்கு) செயல் அலுவலர் பொன்னியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

      கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கைய கப்படுத்தும் நட வடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமுதாயத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதால் அதுவரை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

      50 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ததற்கான ஆதாரங்களை செயல் அலுவலரிடம் ஒப்படைக்க சமுதாய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறுத்தி வைத்தது. உடன்பாடு ஏற்பட்டதால் பொது மக்களும், பக்தர்களும் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

      • அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது.
      • மதுரை ஐகோர்ட்டில் ஆணையர் விளக்கமளித்தார்.

      மதுரை

      மதுரையை சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியின் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது.

      இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற இருக்கக்கூடிய பங்குனி திருவிழாவில் தனி நபர்களை கொண்டு அறநிலைத்துறை அதிகாரிகள் கமிட்டி அமைத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். எனவே 2017-ம் ஆண்டு உத்தரவை பின்பற்றி எந்த தனி நபர்களும் தற்காலிக கமிட்டி அமைத்து திருவிழா நடத்தாமல் கோவில் இந்து சமய அறநிலை துறை நேரடியாக திருவிழாவை நடத்த உத்திரவிட வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

      இந்த மனு முந்தைய விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது.

      அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

      அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் செயல்படும் கோவில்களில் திருவிழா காலங்களில் குழு அமைப்பதால் பல்வேறு புகார்கள் வழக்குகள் வருகின்றது. எனவே இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி விழா குழு அமைக்க எந்த விதிகளும் இல்லை.

      எனவே எதிர்காலங்களில் திருவிழா குழு அமைக்க கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்க ளுக்கும் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது என்றும், இதனை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவை தாக்கல் செய்தார்.

      இதனை பதிவு செய்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

      • எது செய்தால் நமக்கு அருள் கிடைக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.
      • தயவு உருவாகும் உள்ளங்களிலே இறைவன் இருப்பார்.

      திருப்பூர் :

      வள்ளலார் - 200 முப்பெரும் விழா திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

      இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:- கோவில்களை அறநிலையத்துறையால் மட்டுமே சிறப்பாக பராமரிக்க முடியும். வள்ளலாரை எதற்கு கொண்டாடுகிறோம். எது செய்தால் நமக்கு அருள் கிடைக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.

      அதற்கு பெரிய மந்திரம், ஆகமம், வேதம் எல்லாம் கிடையாது. கடவுளை உணர தயவு ஒன்று தான் பயன்படும்.பிற உயிர்களின் மீதான கருணை ஒன்று தான், 'என்னை ஏறாத மேல்நிலை மேல் ஏற்றியது என்கிறார் வள்ளலார்.

      பிறர் மீது இருக்கும் கருணை, அன்பு, மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு, துக்கப்படக்கூடாது என்ற தவிப்பு, இந்த தயவு தான் வேண்டும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல். வள்ளலாரை புரிந்து கொள்ள வேண்டும்.மாறுவதற்கு தயாராக உள்ளவர்கள் தான் திருவருட்பா படிப்பதற்கு தகுதியானவர்கள். தயவு உருவாகும் உள்ளங்களிலே இறைவன் இருப்பார்.

      இவ்வாறு சுகி.சிவம் பேசினார்.

      • மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
      • அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.

      காஞ்சிபுரம்:

      காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.

      இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.

      இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

      அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.

      • தமிழகத்தில் இருந்த பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை கேரளா பறித்துக் கொண்டதைப் போல மேலும் சில பகுதிகளை அபகரிக்கும் முயற்சி என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
      • கண்ணகி கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

      கூடலூர்:

      தேனி மாவட்டம் கூடலூர் அருகே வண்ணாத்தி பாறை என்ற பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் 4,830 அடி உயரத்தில் இந்த கோவில் உள்ளது.

      இந்த கோவிலுக்கு செல்ல கேரள வனப்பாதை பகுதியே உள்ளது. வருடம்தோறும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் கேரள அரசு இந்த கோவிலுக்கு செல்ல தமிழர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. மற்ற நாட்களில் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.

      ஏனெனில் இப்பகுதியை கேரள அரசும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கோவிலில் எந்தவித பணிகளும் செய்ய முடியாமலும், பக்தர்கள் செல்ல பாதை வசதி கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

      இதனிடையே கடந்த 1 மாதமாக கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப்பகுதியில் டிரோன்களை பறக்க விட்டு ஆய்வு செய்து வருகிறது. சில இடங்களில் எல்லை கற்களையும் நட்டு வைத்ததால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

      ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது.

      ஏற்கனவே தமிழகத்தில் இருந்த பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை கேரளா பறித்துக் கொண்டதைப் போல மேலும் சில பகுதிகளை அபகரிக்கும் முயற்சி என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

      கண்ணகி கோவிலுக்கு செல்ல பலியன்குடி வழியாக சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் தினந்தோறும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். இதன் மூலம் தமிழர்களின் பெருமை மேலும் உலகுக்கு தெரிய வரும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

      இந்த நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

      இது குறித்த அறிவிப்பில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக கூடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

      இதனிடையே கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு செல்லும் பழியன்குடி மற்றும் நெல்லுக்குடி வனப்பாதைகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பம் காசி விஸ்வநாத பெருமாள் கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

      அப்போது கோவில் அறக்கட்டளை செயலாளர் ராஜ கணேசன், பொருளாளர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இக்கோவிலை விரைந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ×