செய்திகள்
நாராயணசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது- பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்

Published On 2020-01-22 02:48 GMT   |   Update On 2020-01-22 02:48 GMT
புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயார் என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி கடைமடை பகுதியான காரைக்கால் பகுதியில் செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது தொடர்பான கடிதம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்து கடந்த ஆண்டு அரசுக்கு வந்தது. அதில், வேதாந்தா நிறுவனம் நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுவை நிலப்பகுதியில் 339 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், கடல் பகுதியில் 4 ஆயிரத்து 47 சதுரகிலோமீட்டர் பரப்பளவிலும் எரிவாயு கிணறுகளை அமைக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

புதுவையில் பாகூரில் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பினையும், காரைக்காலில் 39 சதுர கிலோ மீட்டர் பரப்பினையும் கையகப்படுத்த வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படும். ஹைட்ரோ கார்பனுக்காக 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம்வரை ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுவார்கள். அப்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்படும். அதேபோல் பக்கவாட்டிலும் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்படும். எரிவாயுவினை கண்டுபிடிக்க ரசாயன கலவையும் பயன்படுத்தப்படும்.

இதனால் நிலத்தடிநீர் கீழே சென்றுவிடும். மற்ற நிலப்பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். ரசாயனத்தை பூமிக்குள் செலுத்துவதால் வெளியாகும் கழிவுநீர் சுற்றுச்சூழலை பாதிக்கும். கடல்நீர் நிலத்தடியில் புகுந்து அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் உப்புநீராக மாறும். எனவேதான் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதி இந்த திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என்றேன். அதேபோல் 10.6.2019 அன்று உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதினேன். 20.7.2019 அன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுவை சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இத்தகைய நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் மாநில அரசின் அனுமதி இந்த திட்டத்துக்கு தேவையில்லை எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், நாகை மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும். இந்த திட்டத்துக்கு மக்களின் கருத்துகளைக்கூட கேட்கவில்லை. மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் எதேச்சதிகார நோக்கத்தோடு தனியார் இந்த திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிப்பதாக கூறியிருப்பது சர்வாதிகார போக்கினையே காட்டுகிறது.



சிறிய மாநிலமான புதுச்சேரியில் இந்த திட்டம் எந்த அளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனவே இந்த திட்டத்தை எந்த காலகட்டத்திலும் அனுமதிக்க முடியாது. அதையும் மீறி வந்தால் மாநில அரசே தடுத்து நிறுத்தும். திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமருக்கும், பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் எழுதி உள்ளேன். எங்களுக்கு மாநிலத்தின் மக்கள், விவசாயிகள், மீனவர்களின் நலன்தான் முக்கியம்.

மத்திய அரசு மாநில உரிமையை பறிப்பது மட்டுமல்லாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மீனவர்களின் வாழ்வாதாரம் குறையும் என்பதை புரிந்துகொள்ளாமல் இந்த திட்டத்தை காழ்ப்புணர்ச்சியோடு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை வடமாநிலங்களில் ஏன் கொண்டுவரவில்லை? தமிழகம், புதுச்சேரியில் மட்டும் இந்த திட்டத்தை கொண்டுவர காரணம் என்ன? மத்திய அரசு மக்கள் விரோத போக்கோடு செயல்படுவது வருத்தத்திற்குரியது. மத்திய அரசு திணிக்க நினைப்பதை ஏற்கமுடியாது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கொடுத்த அனுமதியை திரும்பப்பெற புதுவை அரசு சார்பிலும், மக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன். இதையும் மீறி செயல்படுத்த நினைத்தால் நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம். அதற்காக எந்த விளைவினையும் சந்திக்க தயார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர் கமலக்கண்ணன் உடனிருந்தார். 
Tags:    

Similar News