செய்திகள்
கஞ்சா கடத்தல் கைது

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு 80 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 6 பேர் கைது

Published On 2019-12-26 15:59 GMT   |   Update On 2019-12-26 15:59 GMT
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு 80 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாறு வேடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது சிவகாமி நகரில் இருந்து ஒரு கார், அங்குள்ள கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த காரை தனிப்படையினர் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 39 பார்சல்களில் 80 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த காரில் வந்த ராமேசுவரம் சிவகாமி நகரை சேர்ந்த ராஜா (வயது 38), அவரது தம்பி ஜெய்முனியராஜ் (30), நாகராஜ் (30), ரமேஷ் (38), கோபி (31), மற்றொரு ரமேஷ் (31) ஆகிய 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:-

பிடிபட்ட 6 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கஞ்சாவை படகு மூலம் கொண்டு சென்று நடுக்கடலில் வைத்து இலங்கையில் இருந்து படகில் வரும் கடத்தல்காரர்களிடம் கைமாற்றிவிட்டு, அதற்குபதிலாக தங்கக் கட்டிகளை கடத்தி வர திட்டமிட்டு இருந்தனர். போலீசாரின் நடவடிக்கையால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி ராமேசுவரம் கொண்டு வந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக பல்வேறு கடத்தல் வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் உள்ளிட்ட சிலரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News