செய்திகள்
போலி மருத்துவர் முத்தம்மாளிடம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தினார்

கோவையில் போலி பெண் டாக்டர் கைது

Published On 2019-12-25 05:28 GMT   |   Update On 2019-12-25 05:28 GMT
கோவையில் 20 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகே உள்ள சின்னதடாகம் 24.வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி சித்ரா(வயது32).

கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வரும் முத்தாம்மாளிடம்(54) சென்று சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

மேலும் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டதே காரணம் என்றனர்.

இதையடுத்து டாக்டர்கள் சித்ராவிடம் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வரும் முத்தம்மாள் என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்து டாக்டர்கள் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சுகாதாரத் துறையின் இணை இயக்குனர் கிருஷ்ணா, தேசிய சுகாதார இயக்குனர் டாக்டர்.வெங்கடேஷ் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அதிகாரி சாந்தாமணி ஆகியோர் 24. வீரபாண்டி கிராமத்தில் முத்தம்மாள் நடத்தி வரும் கிளினிக்கில் சோதனை செய்தனர்.

அப்போது முத்தம்மாள் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு டாக்டராக வேலை பார்த்து வந்ததும், அங்குள்ள அறையில் ஏராளமான காலாவதியான மருந்து, மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து ஆய்விற்கு அனுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போலி டாக்டர் முத்தம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில், சின்னதடாகம் அடுத்த 24. வீரபாண்டி கிராமத்தில் போலி மருத்துவம் பார்த்து வந்த முத்தம்மாளின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஆகும்.

இவரது கணவர் திருச்சிற்றம்பலம். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். முத்தம்மாள் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவரின் வீட்டில் வேலைக்காரியாக வேலை பார்த்துள்ளார்.

அப்போது அந்த டாக்டர் வீட்டிற்கு வரும் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளிக்கும் முறைகள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பற்றி அவரிடம் அறிந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் முத்தம்மாளின் கணவர் இறந்து விட்டார். இதையடுத்து முத்தம்மாள் தனது மகன், மகள்களை கள்ளக்குறிச்சியில் தனது உறவினர்கள் வீட்டில் விட்டு விட்டு கோவை வந்துள்ளார்.

பின்னர் சின்னதடகாம் அருகே உள்ள 24.வீரபாண்டி கிராமத்தில் சிறியதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீட்டின் ஒரு அறையிலேயே சிறிதாக கிளினிக் நடத்தி வந்துள்ளார்.

அங்கு தான் திருச்சியில் டாக்டர் வீட்டில் வேலை பார்த்தபோது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர் இந்த பகுதியில் கடந்த 20 வருடத்திற்கும் மேலாக மருத்துவம் பார்த்துள்ளார்.

மேலும் இவர் வைத்துள்ள மருந்துகளின் தன்மை குறித்து மருத்துகள் துறை ஆய்வாளர் வந்து ஆய்வு செய்த பின்பு தான் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது ஆனைகட்டி ஆரம்பர சுகாதார நிலைய டாக்டர் லோகநாயகி, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர். சின்னதடாகம் பகுதியில் போலியாக மருத்துவம் பார்த்து மக்களை ஏமாற்றி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News