செய்திகள்
ஹெல்மெட் வாங்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்

Published On 2019-12-18 04:43 GMT   |   Update On 2019-12-18 04:43 GMT
வெங்காய விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளதால் பொதுமக்களை கவரும் விதமாக ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தள்ளுபடியை சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஹெல்மெட் வியாபாரி அறிவித்துள்ளார்.
சேலம்:

தமிழக அரசு விபத்தை குறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

சேலம் மாநகரபோலீஸ் துறை சார்பில் சேலத்தில் 2 முக்கிய சாலைகளை ஹெல்மெட் சாலை என்று அறிவித்தது. அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் மறித்து அறிவுரை கூறி வேறு வழியில் அனுப்பி வைத்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி வருகின்றனர். இதனால் ஹெல்மெட் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெங்காய விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளதால் பொதுமக்களை கவரும் விதமாக ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தள்ளுபடியை சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஹெல்மெட் வியாபாரி முகமது காசிம் அறிவித்தார்.

இதனை அறிந்த பொதுமக்கள் கோட்டை பகுதியிலுள்ள அந்த கடைக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு ஹெல்மெட்களை வாங்கி சென்றனர். அவர்களுக்கு 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டது.

இது குறித்து முகமது காசிம் கூறும்போது,

நான் கடந்த 7 ஆண்டுகளாக ஹெல்மட் விற்பனை செய்து வருகிறேன். தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்று அறிவித்தேன். அது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெங்காய விலையை கருத்தில் கொண்டு இலவசத்தை அறிவித்தாலும், இதன் மூலம் வாடிக்கையாளர்களிடையே ஹெல்மட் அணிவதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News