செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வி‌ஷம் குடித்த விவசாயி.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகளுடன் வி‌ஷம் குடித்த விவசாயி

Published On 2019-11-11 08:31 GMT   |   Update On 2019-11-11 08:31 GMT
கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மற்றும் மகளுடன் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த விவசாயி மாடசாமி (வயது50). இவர் இன்று தனது மனைவி சவரியம்மாள் (46), மகள் முப்பிடாதி (17), மகன் பால முருகனின் 2 குழந்தைகள் ஆகியோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்பு மாடசாமி தனது பேரக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தின் முன் அமர்ந்து கொண்டார். அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘பால முருகன் மீது உள்ள வழக்குகள் தொடர்பாக விசாரிப்பதாக கூறி எங்களை போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். எனது மகளின் படிப்பு சான்றிதழ்களையும் போலீசார் எடுத்து சென்று விட்டனர். இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்ய போகிறோம். நாங்கள் இறந்த பிறகு எங்களது உடலின் மீது எனது மகளின் சான்றிதழை போட்டு தீவைத்து எரித்து விடுங்கள்’ என்று ஆவேசமாக கூறியிருந்தனர்.

மேலும் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சற்று மயக்கத்துடன் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த கலெக்டர் ஷில்பா, அவர்களிடம் உடனடியாக விசாரிக்குமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இருவரும் பூச்சி மருந்தை குடித்து விட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதே போல் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே பூச்சி மருந்தை குடித்து விட்டு மாடசாமி அமர்ந்திருந்தார். அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News