செய்திகள்
பேச்சிப்பாறை அணையில் நீர் நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்.

40 அடியை எட்டும் பேச்சிப்பாறை அணை- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-11-04 05:33 GMT   |   Update On 2019-11-04 05:33 GMT
தொடர் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதே சமயம் கியார் புயல், மகா புயல் காரணமாக இந்த மழை கனமழையாக தீவிரம் அடைந்தது.

குமரி மாவட்டத்தின் அணைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மற்ற அணைகளான சிற்றாறு-1, சிற்றாறு-2, பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணைகளுக்கும் தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக பேச்சிப்பாறை அணையை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி அந்த அணையில் 39.80 அடி தண்ணீர் உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பேச்சிப்பாறை அணையில் சுமார் ரூ.61 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் வருகிற 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பிரதான அணையின் முன் பகுதியில் சாய்வு அணை அமைத்து பலப்படுத்துவது, கூடுதலாக 8 மறுகால் மதகுகள் அமைப்பது, பிரதான மதகுகளை நவீனப்படுத்துவது, அணையின் உள்பகுதி சுவரில் ரசாயனம் கலந்த சிமெண்ட் கலவையை பூசி பலப்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 95 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.

இந்த பணிகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பேச்சிப்பாறை அணையில் 15 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கமுடியாத நிலை இருந்து வந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதால் தற்போதைய மழையை பயன்படுத்தி கூடுதல் தண்ணீர் தேக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் பேச்சிப்பாறை அணையில் 40 அடியை எட்டும் நிலையில் நீர்மட்டம் உள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 526 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக் கிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளி யேற்றப்படவில்லை.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 72 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 688 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 16.10 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் 136 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 16.20 அடி தண்ணீர் உள்ளது. 42.65 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

54 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நிரம்பி வழிகிறது. நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையும் தனது முழு கொள்ளளவான 25 அடியை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

பொய்கை அணையை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி அந்த அணையில் 32.20 அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 42.65 அடி ஆகும். கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு பொய்கை அணை இப்போதுதான் 32 அடியை தாண்டி உள்ளது.

இந்த அணை தண்ணீர் மூலம் சுமார் 1357 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News