செய்திகள்
கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்

வடகிழக்கு பருவமழை: திருவள்ளூரில் 51 பேரிடர் மீட்பு குழுவினர் தயார்

Published On 2019-10-19 06:42 GMT   |   Update On 2019-10-19 06:42 GMT
வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட 51 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், 42 மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக முதன்மைச் செயலாளரும், கண்காணிப்புக்குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் டி.பி.ராஜேஷ், குமரகுருபரன், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து பொதுமக்களையும், பொருட்களையும் மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினரோடு தன்னார்வலராக நியமிக்கப்பட்ட ஆயிரத்து 246 பேரும் மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் 51 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், 42 மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இதில் முதல் நிலை பொறுப்பாளர்களாக 432 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது, பாம்பு பிடிப்புவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், மரம் வெட்டுபவர்கள் என 136 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்களில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க பள்ளி, திருமண மண்டபங்கள் என 660 மையங்கள் அமைக்கப்படுகின்றன.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக இடர்பாடு குறித்த தகவலை 9444317862 வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகைப்படத்தை அனுப்பலாம். 27664177 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

Tags:    

Similar News