செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை பெண் சிக்கினார்

Published On 2019-10-16 05:54 GMT   |   Update On 2019-10-16 05:54 GMT
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ஹாங்காங்கில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை பெண் கைதானார்.
சென்னை:

இலங்கையின் நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் லிஷாந்தி (27). இவர் இலங்கையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்தார்.

அதன்படி அவர் சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 11-ந்தேதி வந்தார். அங்கு அவரிடம் சோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால் லிஷாந்தி சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் ஏறவில்லை. அவர் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் லிஷாந்தி சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் ஏறாததும், அதற்கு பதில் ஹாங்காங் வழியாக நியூசிலாந்தில் ஆக்லாந்துக்கு செல்லும் விமானத்தில் ஏறியதும் தெரியவந்தது.

விசாரணையில் அவர் கனடா நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் ஆக்லாந்து விமானத்தில் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனே ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹாங்காங் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் லிஷாந்தியை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவரை சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த லிஷாந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் அவரது கணவர் சஞ்சீவன் ஆக்லாந்தில் வசிப்பதும், அவரை சந்திக்க போலி பாஸ்போர்டில் சென்றுள்ளதும் தெரிய வந்தது.

இதற்காக அவர் இலங்கையில் உள்ள போலி பாஸ்போர்ட் ஏஜெண்டு ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் கனடா நாட்டு போலி பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கிறார். உதயாமலர் சிவநேசன் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் கொடுத்தார்.

மேலும் சென்னையில் இருந்து ஆக்லாந்து செல்லவும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இதற்காக அந்த ஏஜெண்டுக்கு முன் பணமாக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்.

2 பாஸ்போர்ட்டுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்த லிஷாந்தி போலி பாஸ்போர்ட்டு மூலம் ஆக்லாந்து செல்ல முயன்றுள்ளார்.

தனக்கு போலி பாஸ்போர்ட் கொடுத்த ஏஜென்டின் பெயர் சஞ்சீவ் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து லிஷாந்தியை அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பினார்கள். போலி பாஸ்போர்ட்டு கும்பல் தொடர்பாக சென்னை போலீசாருக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News