செய்திகள்
கைது

மதிமுக மாவட்ட செயலாளர் கொலை முயற்சி வழக்கில் கைது

Published On 2019-09-17 06:33 GMT   |   Update On 2019-09-17 06:33 GMT
மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை:

பள்ளிக்கரணையில் என்ஜினீயர் சுபஸ்ரீ, பேனர் சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ம.தி.மு.க. முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக ம.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தன. சைதாப்பேட்டை தாதண்டன் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த ம.தி.மு.க. கொடிகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன.

உதவி செயற்பொறியாளர் வரதராஜ் மற்றும் ஊழியர்கள் கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ம.தி.மு.க.வினர் என்ஜினீயர் வரதராஜை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீசில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை முயற்சி, கும்பலாக கூடுதல், ஆயுதங்களால் தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உதவி கமி‌ஷனர் அனந்த ராமன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ம.தி.மு.க. தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரான சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோவை வைத்து மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மேலும் ம.தி.மு.க.வினர் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News