செய்திகள்
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

Published On 2019-09-16 04:26 GMT   |   Update On 2019-09-16 04:26 GMT
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மதுரை:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஓம்சக்தி நகரில் தனியார் மருத்துவமனை அருகே உள்ள குப்பை தொட்டியில் இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது குப்பை தொட்டிக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது.

உடனே பொதுமக்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அந்த குழந்தைக்கு பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிறந்து சில மணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தையை வீசிச்சென்ற கல்மனம் கொண்ட தாய் யார்? என்பது தெரியவில்லை.

தவறான உறவில் பிறந்ததால் அந்த குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்குவோர் பலர் இருக்க பிறந்த அழகான ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News