செய்திகள்
மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

தொப்பையாறு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

Published On 2019-09-06 07:10 GMT   |   Update On 2019-09-06 07:10 GMT
பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என்று 50-க்கும் மேற்பட்டோர் இன்று தொப்பையாறு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏரியூர்:

சேலம் மாவட்டம் மூலக்காடு பகுதியிலிருந்து மேச்சேரிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

மூலக்காடு பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மேச்சேரி செல்ல இந்த அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் மூலக்காடு பகுதியில் தார்சாலை குண்டு குழியுமாகி பழுதடைந்தது.

குண்டு குழியுமான இந்த சாலையில் பஸ்கள் இயக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என்று 50-க்கும் மேற்பட்டோர் இன்று தொப்பையாறு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் குறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பிறகு மறியலை மாணவர்கள் கைவிட்டனர். 

இந்த சாலை மறியலால் பென்னாகரம்-மேச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை வசதி வேண்டி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News