செய்திகள்
யானை

கோவை அருகே ஒற்றை யானை தாக்கி லாரி டிரைவர் பலி

Published On 2019-08-19 04:29 GMT   |   Update On 2019-08-19 04:29 GMT
கோவை அருகே ஒற்றை யானை தாக்கி லாரி டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன.இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பன்னிமடை பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. அப்போது பன்னிமடை சஞ்சீவி நகரை சேர்ந்த கணேசன்(வயது 27). லாரி டிரைவரான இவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை கணேசனை பார்த்ததும் துரத்தி சென்று அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் கணேசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்து அங்கிருந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் காயமடைந்த கணேசனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது பன்னிமடை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News