செய்திகள்
காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

குடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்த விவகாரம் - ஐகோர்ட்டு தண்டனையை நிறைவேற்றிய மாணவர்கள்

Published On 2019-08-15 06:38 GMT   |   Update On 2019-08-15 06:38 GMT
குடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி காமராஜர் நினைவு இல்லத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்த 8 மாணவர்கள் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்தனர்.

இதை கண்டித்த கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் சஸ்பெண்டு செய்தது. மேலும் 3-ம் ஆண்டு படிப்புக்கும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து 8 மாணவர்களும் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மாணவர்கள் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்தது தவறு தான். அந்த தவறை தற்போது உணர்ந்துள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்கள் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே 8 பேரும் சுதந்திர தினத்தன்று (இன்று) விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தப்படுத்தும் பணி, அங்கு வரும் பொதுமக்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் மாணவர்களின் இந்தப்பணியை விருதுநகர் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர், கல்லூரி உதவி பேராசிரியர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி சுதந்திர தினமான இன்று காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 9 மணிக்கு 8 மாணவர்களும் ஆஜர் ஆனார்கள். அவர்கள் நினைவு இல்லத்தில் சுத்தப்படுத்தும் பணியை காலை 10 மணிக்கு தொடங்கினர். மேலும் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்களுக்கு மாணவர்கள் உதவினர்.

இந்தப்பணிகளை டவுன் இன்ஸ்பெக்டர் பிரியா, வணிகவியல் துறை பேராசிரியர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மாலை 4 மணிக்கு பிறகு 8 மாணவர்களும் மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News