செய்திகள்
கொலை செய்யப்பட்ட 3 பேர்

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை - திமுக பெண் பிரமுகர் - கணவரிடம் விசாரணை

Published On 2019-07-30 06:46 GMT   |   Update On 2019-07-30 09:55 GMT
நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சீனியம்மாள் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சென்னை:

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ந்தேதி வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால் இந்த துணிகர கொலை சம்பவத்தில் கொள்ளையர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்வேறு தனிப்படைகள் அமைத்து துப்பு துலக்கப்பட்டது.

விசாரணையில், நகை-பணத்துக்காக கொலை நடக்கவில்லை, சொத்து பிரச்சினையும் காரணம் இல்லை என்பது உறுதியானது. அரசியல் முன் விரோதம் காரணமாக உமா மகேஸ்வரி, கணவருடன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மதுரையை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்தார். இது தொடர்பாக சீனியம்மாள் அளித்த பேட்டியில் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.



ஆனால் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் போலீசில் சிக்கினார். நெல்லை என்ஜினீயர் காலனியில் மேலப்பாளையம்-ரெட்டியார்பட்டி சாலையில் உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கார்த்திகேயனை காட்டிக் கொடுத்தது. அவரது ஸ்கார்பியோ கார் கொலை நடந்த அன்று உமா மகேஸ்வரியின் வீட்டை சுற்றி நோட்டமிட்டது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் கார்த்திகேயனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனி ஆளாக 3 பேரையும் நான்தான் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்தார். கார்த்திகேயனை கைது செய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்கிறார்கள்.

இந்த நிலையில் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி நேற்று மாலை உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

கைதான கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தில், எனது தாய் சீனியம்மாளின் அரசியல் வாழ்க்கை உமா மகேஸ்வரியால்தான் அழிந்தது, அதன் காரணமாகவே ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

உமா மகேஸ்வரிக்கும், சீனியம்மாளுக்கும் தி.மு.க.வில் யார் பெரிய ஆள்? என்பது தொடர்பாக திரை மறைவில் மோதல் இருந்து வந்துள்ளது. 1996-ம் ஆண்டு உமா மகேஸ்வரி நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சீனியம்மாளும் இந்த பதவியை குறி வைத்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உமா மகேஸ்வரிக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது.

பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் உமா மகேஸ்வரிக்கே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தோற்றுப் போய் விட்டார். இருப்பினும் சீனியம்மாளுடனான அரசியல் விரோதம் வளர்ந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது. கிட்டத்தட்ட கடந்த 23 ஆண்டுகளாக உமா மகேஸ்வரிக்கும், சீனியம்மாளுக்கும் அரசியல் பகை இருந்து வந்துள்ளது. அதுவே இப்போது கொலையில் முடிந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.வினர் மத்தியில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இடையே இந்த மோதல் விவகாரமும், உமா மகேஸ்வரி கொலை சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வருகிற அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக இப்போதே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்ட தி.மு.க.விலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அக்கட்சியினர் பலர் ஆயத்தமாகி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மீண்டும் உமா மகேஸ்வரியின் கை ஓங்கி விடக்கூடாது என்பதற்காக அவரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ‘அரசியல் சதி’ காரணமாக அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன், தனி ஆளாக சென்று உமா மகேஸ்வரி உள்பட 3 பேரையும் நானே கொலை செய்தேன் என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார். இதுவும் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகேயனுடன் கூலிப்படை கொலையாளிகள் சேர்ந்தே இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.

அவர்களை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே கொலையில் தனக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக கார்த்திகேயன் கூறி இருக்கலாம் என்பதும் போலீசாரின் சந்தேகமாக உள்ளது.

கூலிப்படையினர் சிக்கினால் பின்னணியில் இருப்பவர்களை உடனே காட்டி கொடுத்துவிடுவார்கள் என்பதாலேயே கார்த்திகேயன் தன்னை மட்டுமே கொலையில் தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளித்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இருப்பினும் கொலைக்கான முழு பின்னணி என்ன? என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீசார் சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை நெல்லைக்கு சென்றனர். அங்கு உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை தொடர்பாக அதிரடி விசாரணையை தொடங்கினர்.

பாளையங்கோட்டை போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கி கொலையாளியையும் கைது செய்துவிட்ட நிலையில், கொலைக்கான பின்னணி? என்ன என்பதை கண்டு பிடிப்பதிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பாளையங்கோட்டை போலீசார் திரட்டி வைத்துள்ள ஆதாரங்களை பெற்று அடுத்தகட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இது தொடர்பாக சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் சன்னாசி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

நெல்லையில் வசித்து வந்த சீனியம்மாள் கடந்த ஓராண்டாக மதுரையில் உள்ள மகள் வீட்டில் கணவருடன் தங்கியுள்ளார். இன்று அல்லது நாளை 2 பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது. உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

சீனியம்மாளிடம் அவரது மகன் கார்த்திகேயன் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட உள்ளன. உமா மகேஸ்வரிக்கும் உங்களுக்கும் இருந்த அரசியல் பகை தொடர்பாக கார்த்திகேயன் ஏதாவது தெரிவித்தாரா? கொலை தொடர்பாக உங்களிடம் என்ன பேசினார்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.

இதன் முடிவில், உமா மகேஸ்வரி கொலையில் சீனியம்மாளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 3 பேரின் கொலையில் சீனியம்மாளும் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் உமா மகேஸ்வரியின் மற்ற அரசியல் எதிரிகள் யாரேனும் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலையாளி கார்த்திகேயன் கொலை நடந்த அன்று செல்போனில் யார்-யாருடன் பேசியுள்ளார்? அவரை தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார்? என்பது பற்றிய விவரங்களையும் சேகரித்துள்ள போலீசார் அது தொடர்பான விசாரணையையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அவருடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீஸ் விசாரணை வேகம் எடுத்துள்ளதால் உமா மகேஸ்வரி கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Tags:    

Similar News